ஆண்டுதோறும் தை மாதம் 2 ஆம் நாளன்று தமிழ் கூறும் நல்லுலகெங்கும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்படுகிறது .வள்ளூவனாருக்கு அஞ்சலி செலுத்தி அவரது அரும்பெரும் படைப்பான திருக்குறளின் மேன்மையைப் போற்றும் நாளாகத் திருவள்ளுவர் தினம் அமைந்துள்ளது. .
மதம், மொழி, பூகோளம் மற்றும் கால எல்லைகளைக் கடந்து மனித இனத்துக்கு வழிகாட்டியாக இலங்கும் ஒப்பற்ற அறநூல் திருக்குறளாகும். . இதன் அறச்சிந்தனைகள் அனைத்து மதங்களுக்கும், மொழிகளுக்கும் ஏற்புடையதாய் அமைந்திருப்பது திருக்குறளின் தனிச்சிறப்பாகும். இதைச் சுட்டிக் காட்டும் வகையில் புலவர் கல்லாடர்
‘ஒன்றே பொருளினெனின் வேறென்பார்:
வேறெனினின் அன்றென்பார் ஆறு சமயத்தார்-
நன்றென எப்பாலரும் இயையவே
வள்ளளுவனார் முப்பால் மொழிந்த மொழி’
என்று பாடிச் சிறப்பித்துள்ளார். .உலகப் பொதுமறை’ என்று போற்றப் படுகின்ற திருக்குறள் உலகிலேயே அதிகமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் இரண்டாம் இடம் பெறுகிறது என்பது பெருமைக்குரிய சேதி ஆகும். . நிகழ் காலம் மற்றும் வருங்காலத்திற்கும் பொருந்தக் கூடிய உயரிய விழுமியங்களைத் தன்னுள்ளே அடக்கிய பெருமையும் திருக்குறளுக்கே உரியதாகும். . மக்கள் தங்கள் தனி மனித வாழ்விலும், பொது வாழ்விலும் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகளைத் திருக்குறளின் ‘அறம், பொருள் இன்பம் என்ற முப்பிரிவுகள் மூலம் வள்ளுவனார் உலகிற்குத் தெளிவாக விளக்கியுள்ளார். பிறவிப் பெருங்கடலில் எதிர் நீக்சல் போட்டுக் கொண்டிருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் கலங்கரை விளக்கமாக வழி காட்டி வரும் நூல் திருக்குறள் ஆகும்.
‘மனத்துக்கண் மாசிலனாகல் அனைத்தறன்’, எனவும்,
‘யாமெய்யாக் கண்டவற்றுள் இல்லை என
வாய்மையின் நல்ல பிற ‘என அறநெறியையும்
எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியர்
திண்ணியராகப் பெறின்- — எனவும்,
ஊழையும் உப்பக்கம் காண்பர் உழைவின்றி
தாழா தஞற்றுபவர்’ என உழைப்பின் மேன்மையையும்
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயபனும் அது – என இல்வாழ்வின் முறைமையையும் திருக்குறள் தெளிவாக்குகிறது.
வாழ்வின் அனைத்து நிலைகளிலும் பின்பற்றப்பட வேண்டிய முறைமைகளை பாமரனுக்கும் புரியும் வகையில் எளிய தமிழில் பலவாறாக எடுத்துக்கூறி, மனித குலம் வையத்துள் வாழ்வாங்கு வாழ வழிகாட்டிச் சென்றுள்ள வள்ளுவப் பெருந்தகையை வாழ்த்தி வணங்குவோம்!
வாழ்க திருக்குறள்! ஓங்குக திருவள்ளுவர் புகழ்!