கவியரசு கண்ணதாசன் கவியரங்கம் – ஜூலை 20, 2019 கண்ணதாசனின் பார்வையில் காதல்

மென்கா/ற்று சுருதி மீட்ட
மழைத்துளிகள் தாளமிட
முத்தான தமிழில் தமிழ்
சொத்தான கவியரசரின் புகழ்
பாட வந்தேன் ; உங்கள்
ஆதரவை நாடி வந்தேன் !

வான் தந்த கொடை மழை
கடல் தந்த கொடை முத்து
தமிழ் தந்த கொடை கவியரசர் கண்ணதாசன் !

அவையோருக்கும் என் சக கவிஞர்களுக்கும் அன்பு வணக்கம்!

கண்ணதாசனின் பார்வையில் காதல்
இதுவே என் தலைப்பு : எதை
எடுப்பது எதை விடுப்பது என
என்னுள் ஒரு மலைப்பு

புவி உலகில் எதையும் தேட இருக்கிறது கூகுள்
கவி உலகின் கூகுள் கவியரசர் கண்ணதாசன் அன்றோ
கண்ணதாசனைக் காதல் தாசனாய் காண்போமா
அவர் படைத்த காதல் வானில் சற்றே உலா வருவோமா?

காதலும் மழையைப் போன்றது தான்
ஏழை பணக்காரன் உயர்ந்தவன் தாழ்ந்தவன்
என்ற வித்தியாசம் பார்க்காதது :
எல்லோருக்கும் பொதுவானது

காதலுக்குக் கண்ணில்லை ;
கவியரசர் சொல்வதோ
உடல் ஊனம் ஒரு குறையில்லை
காதலிக்க அது தடையில்லை

அதனால் எழுதினார்
“கால்களில்லாமல் வெண்மதி வானில் தவழ்ந்து வரவில்லையா
இரு கைகளில்லாமல் மலர்களை அணைத்து காதல் தரவில்லையா
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவதுண்டோ
உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் அன்பு குறைவதுண்டோ

காதலிக்க பணம் தேவையில்லை
அன்பு மனம் மட்டுமே போதும்
கவியரசரின் வரிகளில்
“பொன்னை விரும்பும் பூமியிலே என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி அலையும் உலகில் இதயம் தேடும் என்னுயிரே

அண்ணலும் நோக்கினான் ; அவளும் நோக்கினாள்
இது கம்பர் பாடிய காதல்
கண்கள் தானே காதலின் வாகனம் !

கவியரசர் கண்களைப் பாடிய வரிகள்:
கண்கள் எங்கே நெஞ்சமும் எங்கே கண்டபோதே சென்றன அங்கே
பார்வை ஒன்றே போதுமே பல்லாயிரம் சொல் வேண்டுமா
கண்களின் வார்த்தைகள் புரியாதா காத்திருப்பேன் என்று தெரியாதா
ஒரு நாளில் ஆசை எண்ணமே மாறுமோ
உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல…….

காபி ஷாப்பில் தொடங்கி டாஸ்மாக்கில்
முடிந்து விடுவது இன்றைய காதல்
கவியரசர் பாடிய காதல் மரணத்தையும்
விஞ்சிய அமர காதல் …

இந்த மானிடக் காதலெல்லாம் ஒரு மரணத்தில் மாறி விடும்
அந்த மலர்களின் வாசமெல்லாம் ஒரு மாலைக்குள் வாடி விடும்
நம் காதலின் தீபம் மட்டும் எந்த நாளிலும் கூட வரும்

ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்
உன் காலடி ஓசையிலே உன் காதலை நான் அறிவேன்

காதலர்கள் அழியலாம்; காதல் அழிவதில்லை.

காதலன் காதலியைப் பார்க்கிறான்
கவியரசர் காதலனாய் மாறுகிறார்

“பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன் ,
உனைத் தேன் என நான் நினைத்தேன்
அந்த மலைத்தேன் இதுவென மலைத்தேன்
வான் மழையைக் கண்டதுண்டு , கவியரசரோ தேன் , தேன் என தேன் மழை பொழிகிறார்.

நிலவைத் தோற்கடிக்கும் என் காதலியின் அழகு

வான் நிலா நிலா அல்ல என் வாலிபம் நிலா
தேன் நிலா எனும் நிலா என் தேவியின் நிலா
நீ இலாத நாளெல்லாம் நான் தேய்ந்த வெண்ணிலா

பூமிக்கு சொந்தம் ஒரு நிலா.. கவியரசருக்கு எத்தனை நிலாக்கள் சொந்தம்?

கல்லான பெண்ணின் மனதில் கள்ளத்தோடு காதல் புகுந்தபோது
கவியரசர் உவமைகளோடு சுவையாய் வடிக்கும் கவிதை இது

கல்லான முல்லை இன்றென்ன வாசம்
காற்றான ராகம் ஏனிந்த கானம்
வெண்மேகம் அன்று கார்மேகம் இன்று
யார் சொல்லித் தந்தார்
மழைக்காலம் என்று
மன்மதன் என்பவன் கண் திறந்தானோ பெண்மை தந்தானோ

காய்களைக் கொண்டு சமையல் நடக்கலாம் ;
காதல் கவிதையும் தொடுக்கலாம் – கவியரசரின் படைப்பு இதோ

அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலவே
இத்திக்காய் காயாதே என்னைப் போல் பெண்ணல்லவா

வேகத்தடை இல்லாத ஒரே பாதை காதல் என்று
காதல் கொண்ட பெண்ணின் மனதின் உற்சாகத்தை
வார்த்தைகளில் கொட்டுகிறார்
காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி
கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கி விடாது
மங்கை நெஞ்சம் பொங்குபோது விலங்குகள் ஏது

எந்த மொழி இனியது, உலகில் பெரியது ?
சர்ச்சை வேண்டாம், கவியரசர் சொன்ன தீர்ப்பு இது

உலகமெங்கும் ஒரே மொழி, உள்ளம் பேசும் காதல் மொழி
ஓசையின்றி பேசும் மொழி , உருவம் இல்லா தேவன் மொழி

விழி வழி வரும் காதலே உலக மொழி என்று
அழகாய் சொன்னவர் கவியரசர்.

காதலியை வர்ணிக்க வரிகள் தேவையா
கவியரசரின் கவிதைப் பெட்டகத்தைத் தேடுங்கள்

பறவைகளில் அவள் மணிப்புறா
பாடல்களில் அவள் தாலாட்டு
கனிகளிலே அவள் மாங்கனி
காற்றினிலே அவள் தென்றல்

காலங்களில் அவள் வசந்தம்
கலைகளிலே அவள் ஓவியம்
மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை

மகுடிக்கு மயங்காத நாகம் உண்டா ?
புகழ்ச்சிக்கு மயங்காத காதலி உண்டா ?

காவிய நாயகிகளோடு தன் காதலியை
ஒப்பிடும் கவியரசரின் கற்பனைத் திறன்
தான் எத்தனை அழகு ..

கம்பன் கண்ட சீதை உந்தன் தாய் அல்லவா
காளிதாசன் சகுந்தலை உன் சேய் அல்லவா
அம்பிகாபதி அணைத்த அமராவதி மங்கை அமராவதி
சென்ற பின்பு பாவலர்க்கு நீயே கதி.. என்றும் நீயே கதி..

கல்லெல்லாம் மாணிக்கக் கல் ஆகுமா
கவியரசரின் இப்பாடலும் உயர்ந்த மாணிக்கமன்றோ

தீராத நோய் காதல் – அதன் சகோதரி சந்தேகம்
காத்திருக்கும் காதலன்
தாமதமாய் வரும் காதலி

அது வாட்ஸப் இல்லா வசந்த காலம், எமோஜிக்கள் இல்லா இனிமையான காலம்… உரையாடல்கள் உயிருடன் தான் இருந்தன.

காதலர்களின் உரையாடல் கவிதையாய் மலர்கிறது
கவியரசரின் கைவண்ணத்தில்

நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்
உன் மலர் கூந்தல் அலைபாய அவரென்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது சுவையென்ன தந்தார்

பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளை கொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற

நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன் – என்
மகராணி உனைக் காண ஓடோடி வந்தேன்

இரு மனங்கள் ஒன்றாவது திருமணத்தில்

சம்சாரம் என்பது வீணை சந்தோஷம் என்பது ராகம்
சலனங்கள் அதில் இல்லை.. மணம் , குணம், ஒன்றான முல்லை

இனிமையான இல்லறம் எப்படி இருக்க வேண்டும்
என்று பகர்கிறார் சுவையாக :

பாலோடு பழம் யாவும் உனக்காக வேண்டும்
பாவை உன் முகம் பார்த்து பசியாற வேண்டும்
மனதாலும் நினைவாலும் தாயாக வேண்டும்
மடிமீது விளையாடும் சேயாக வேண்டும்

நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்

இதுவல்லவோ கவியரசர் உரைத்த “இல்லற கெமிஸ்ட்ரி”!!
இல்லறம் இப்படி இருந்தால் குடும்ப நீதிமன்றங்களை மூடி விடலாம் தானே…

பிரிந்த காதலர்கள் சேரும் போது
வார்த்தைகள் ஊமையாகி மௌனம்
மட்டுமே பேசும்;

சுகம் , துக்கம் இரண்டின் உச்சகட்டமும் அழுகை தானே…

கவியரசரின் சொல்வண்ணம் இங்கே..
பிரிந்தவர் மீண்டும் சேர்ந்திடும் போது அழுதால் கொஞ்சம் நிம்மதி
பேச மறந்து சிலையாய் இருந்தால் அதுதான் தெய்வத்தின் சந்நிதி-
அது தான் காதல் சந்நிதி..

ஒரு கொடியில் ஒரு முறை மட்டுமே
பூக்கும் மலர் தானே காதல்…
கைபிடித்த கணவன் மரணத்தின் விளிம்பில்..
முடிந்த மனைவியின் காதலை மலரச் செய்ய
நினைக்கும் கணவன்…..அந்த மனைவியின்
மனநிலையை கவியரசர் கவிதையில் உணர்த்துகிறார்…

தெய்வத்தின் மார்பில் சூடிய மாலை தெருவினிலே விழலாமா
தெருவினிலே விழுந்தாலும் வேறோரு கை தொடலாமா
ஒரு கொடியில் ஒரு முறை தான் மலரும் மலரல்லவா
ஒரு மனதில் ஒரு முறை தான் வளரும் உறவல்லவா

முன்னாள் காதலியை இந்நாளில் சந்திக்கிறான்
வேறொருவரின் மனைவியாக
கண்ணதாசன் காலத்து காதல்
கண்ணியமானது, வன்முறையற்றது:

வருவாய் என நான் தனிமையிலிருந்தேன்
வந்தது வந்தாய் துணையுடன் வந்தாய்
துணைவரைக் காக்கும் கடமையும் தந்தாய்
தூயவளே நீ வாழ்க

எங்கிருந்தாலும் வாழ்க உன் இதயம் அமைதியில் வாழ்க
மஞ்சள் வளத்துடன் வாழ்க உன் மங்கல குங்குமம் வாழ்க

காதலுக்குக் கொடுக்க மட்டுமே தெரியும்

முதுமையின் வாசலில் கணவன்
தலையில் நரை, தள்ளாடும் நடை
காதல் மனைவி மட்டுமே துணை
வியட்நாம் வீட்டின் நாயகன் பாடுகிறான்…. கண்ணதாசனின் வரிகளை

ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்தும் என்ன
வேரென நீ இருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்
பேருக்கு பிள்ளை உண்டு பேசும் பேச்சுக்கு சொந்தம் உண்டு
என் தேவையை யாரறிவார் உன்னைப் போல் தெய்வம் ஒன்றே அறியும்

உன் கண்ணீல் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி
என் கண்ணிற் பாவையன்றோ கண்ணம்மா என் உயிர் நின்னதன்றோ

தாய்க்குப் பின் தாரம் ; தாரத்தையே தெய்வமாய் உயர்த்தி விடுகிறார் கவியரசர். இது தானே காதலின் உச்சம் ??

அவள் உலகம் தெரியாத வெகுளிப் பெண்
அவனுக்கோ அவள் தான் உலகமே
ஆழ்ந்த காதலுடன் அவன் பாடுகிறான்

காதல் கொண்டேன் கனவினை வளர்தேன்
கண்மணி உனை நான் கருத்தினில் நிறைத்தேன்
உனக்கே உயிரானேன் எந்நாளும் எனை நீ மறவாதே
நீயில்லாமல் எது நிம்மதி நீதானே என் சந்நிதி

கண்ணே கலைமானே கன்னி மயிலென கண்டேன் உனை நானே
அந்திப் பகல் உனை நான் பார்க்கிறேன்
ஆண்டவனை இதைத் தான் கேட்கிறேன்

தன் கடைசிப் பாடலில் , காதலியோடு சேர்த்து நம்மையும் தாலாட்டிவிட்டு மீளா உறக்கத்தில் கவியரசர் கண்ணதாசன் ஆழ்ந்து விட்டாலும், தன் பாடல்களின் மூலமும் கவிதைகளின் மூலமும் இன்றும் நம்மோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு இந்த கவியரங்கமே சாட்சி ..

நல்வாய்ப்பு அளித்த நவிமும்பைத் தமிழ் சங்கத்துக்கும் , ரசிகர்களுக்கும், இங்கு வந்து என்னை ஊக்குவித்த என் தோழமைகளுக்கும் நன்றி. வணக்கம்.