கண்ணதாசன் கவியரங்கம்

குருசேத்திரத்தில் தத்துவம் பேசியவன் கடவுள்.
அது இந்தியனுக்குப் பகவத்கீதை
கடவுளுக்கு பக்தியைக் கற்பித்தவன் மனிதன்.
அதுவே தமிழ்மனம் உருகிய திருவாசகம்.
அவள் சூடிய பூவை சூட வைத்து
எல்லாம் அறிந்த அவனையும்
காதலால் வென்றவள் ஆண்டாள்.
பாவையருக்கெல்லாம் அவளே பாசுரம்.
இந்த மூன்றையும் ஆண்டவன்
தமிழால் ஆண்டவன் கண்ணதாசன்
ஆதலால்
அவனுக்கு மரணமில்லை.
அவன் நிரந்தரமானவன்
என்றும் அழிவதில்லை.
காலனை வென்றவன்
காலத்தை வென்றவன்
கண்ணதாசன் வாழ்க.
அவன் தமிழ்க் காதலியர் வாழ்க.
கண்ணதாசா..
உன்னை வாழ்த்தும் போது
தமிழ் வாழ்கிறது.
தமிழ்த்தாய் வாழ்கிறாள்.
தமிழன் வாழ்கிறான்.
வீடு வரை உறவு வீதி வரை மனைவி
காடு வரை பிள்ளை கடைசிவரை நீ தான்.
எம் வாழ்விலும் சாவிலும் கூடவே பயணிக்கிறாய்.
ஒரு தலைமுறை தமிழ்ச்சாதியின்
ஆலயமணி ஒசை நீயல்லவா!
உன்னை வாழ்த்துகிறேன்.
உன்னை வாழ்த்தினால்- அதுவே
தமிழ்த்தாய் வாழ்த்து, தலைவர் வாழ்த்து.
தொண்டர் வாழ்த்து ..
அட டா.. கண்ணதாசனை வாழ்த்தும் போது
அதுவே கடவுள் வாழ்த்தாகும்
அர்த்தமும் தொனிக்கிறது.
என் சித்தம் தடுக்கிறது.
இதோ.. இதை அரங்கம் ரசிக்கிறது.
வாழ்க வாழ்க ..
கர்ணன் புகழ்ப்பாடிய கண்ணன் வாழ்க
எம் தலைமுறையின் புல்லாங்குழல் வாழ்க
புருஷோத்தமன் வாழ்க.
அவன் புகழ்ப்பாடும் கவிஞர்கள் வாழ்க’
கவியரங்கம் வாழ்க. தமிழ்ச்சங்கம் வாழ்க.
தமிழ் நதியில் விளையாடி
பொதிகை மடியில் தலைசீவிய
4 ஆம் தமிழ்ச்சங்கமே .. நீ
காலத்தை வென்ற தமிழ்க்கடலில் மத்தாகி
பாற்கடலை- பா கடலைக் கடைந்தெடுத்தாய்.
அமுதம் விஷமான போதெல்லாம்
அதுவே உன் கையில் மதுவானது.
நீ போதையில் தள்ளாடும் போதெல்லாம்
தமிழ் தன்னை அலங்கரித்துக் கொண்ட து.
எம் தலைமுறையின் இதயராகத்தை
உன் பாடல்வரிகளால் மீட்டிக்கொண்டோம்.
எம் காதல் கடிதங்கள்
உனக்கு கடன்பட்டிருக்கின்றன.
உன் பாடல்களைக் கேட்கும்போதெல்லாம்
திரும்பவும் திரும்பவும் பிறக்கிறோம்.
“அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வருவதும்
இந்த நாள் அன்றுபோல் இன்பமாய் இல்லையே
அது ஏன் ஏன் “ என்று துடிப்பதும்
எம் ரசனையின் அடையாளம் மட்டுமல்ல.
தமிழ் எம்மில் உயிர்ப்புடன் இருப்பதன்
ஒற்றை அடையாளமய்யா நீ.
உன்னைத் தின்று வளர்ந்தவர்கள் பலர்!
உன்னை வென்று நின்றவர்கள் யார்?

உன் வனவாசத்தில் புயலடித்தப் போது
கிளைகள் உடைந்த ஓசையில்
கூடுகள் சிதைந்தன.
காக்கையின் கூட்டிலிருந்து
தப்பிப்பிழைத்த குயிலொன்று
உன் மதுவை அருந்தி உயிர்ப்பிழைத்த து.
“உங்கள் வானத்திலிருந்து ஒரு நட்சத்திரம்
உதிர்ந்துவிடப் போகிறது.
உங்கள் சோலையிலிருந்து ஒரு குயில்
கண்காணா உலகத்திற்குப்
பறந்து செல்லப் போகிறது” என்று புறப்பட்டாயே
அதுதான் உன் பாடல்களுக்கு
நீயே எழுதிக்கொண்ட பாயிரம்.
உன் அரசியலைப் புரிந்து கொள்ள
நீ விட்டுச்சென்றிருக்கும் கடவுச்சொல்.
அதனை அதனால் திறக்கும் போது
அவன்மீது கவிழ்ந்திருக்கும் இருள்திரை விலகி
வெளிச்சம் படர்கிறது.
ஒவ்வொரு கோப்புகளும் திறக்கின்றன.
உன்னை , உன் தமிழை வெல்லமுடியாதவர்கள்
தங்கள் அரசியல் வித்தைகளால் வென்றுவிட்ட தாக
பிரகடனப்படுத்தியதெல்லாம்
ஒலிக்குப்பைகளாக உதிர்கிறது.
குப்பைகளை அள்ளி எடுத்து
எருக்குழியில் கொட்டுகிறேன்.
மண்ணோடும் இலையோடும்
மழையோடும் சூரிய ஒளியில்
மக்கிப்போகட்டும் குப்பைகள்.

கறும்பாறையைப் பிளந்து கொண்டு எட்டிப்பார்க்கிறது
காக்கையின் எச்சத்தில் விழுந்த விதையின் முகம்.
———
“பேசுவது கிளியா என்று ஆரம்பித்தாய்.
கோவில் கொண்ட சிலையா
கொத்துமலர்க் கொடியா…
என்று நீ தொடரும் போது
காதல் அவள் விழிகளில் நிரம்பி வழிந்த து.
பாடுவது கவியா , இல்லை பாரிவள்ளல் மகனா
அவள் மயக்கத்தில் பாடினாள்.
நாங்களும் கிறங்கித்தான் போனோம்.
அடுத்த வரியில் “சேரனுக்கு உறவா”
என்று நீ கேட்டபோது
நீ போட்டு உடைத்த உண்மை
அரசியல் மேடையில் பற்றி எரிந்திருக்கும்!
ஆனால் நீயோ தாயுமானவன்.
உன் கவிமனம் விழிக்கிறது.
செந்தமிழர் நிலவா..”
என்று சீராட்டுகிறாய்….
ஒரு காலத்தின் அரசியலை
இரண்டே வரிகளில் சொல்லிய
அரசியல் அதிகாரம் நீ தானய்யா.
உண்மைக்கு நெருக்கமானவன் நீ.
நெஞ்சத்தால் ஒரு மனிதன், சொல்லால் ஒரு மனிதன்
செயலால் ஒரு மனிதன் , ஒவ்வொரு மனிதனும் மூன்று வடிவம்
எடுக்கும் உலகத்தில்
நீ மட்டுமே ஒரே மனிதனாக வாழ்ந்துக் காட்டினாய்.
நீ அரசியல் கூடாரங்களை மாற்றிக்கொண்டே இருந்தாய்.
‘உன்னைக் கோமாளி” என்று அவர்கள் கேலி செய்து சிரித்தார்கள்.
மனிதன் என்ற போர்வையில் , மிருகம் வாழும் நாட்டிலே
அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச்சிரிப்பு..
என்று உணர்ந்து கொண்ட து உன் அரசியல் பயணம்.
“ சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி – என்னைச்
சேரும் நாள் பார்க்கச் சொல்லடி..
அந்தச் சிவகாமி மகனிடம்
அந்தச் சிவகாமி மகனிடம் சேதி சொல்லடி..
.. எந்தச் சிவகாமி மகனிடம்..?
சிவகாமி கூட அரசியலானது.
கறுப்பு காந்திக்கு நீ அனுப்பிய
சிவப்பு ரோஜாக்கள் இப்படித்தான் மலர்ந்தன.

நீ அன்போடு கைபோட்ட சில தோள்களில்
முட்செடிகள் கத்தை கத்தையாக
உன் கையைக் கிழித்துவிட்ட து.
உன் கைகளிருந்து வழிந்த ரத்தவாடை
சீழ்ப்பிடித்து நாற்றமடிக்கும் அதிகாரப்போதையை
அம்மணமாக்குகிறது.
இரகசியங்களைக் காப்பாற்றிக்கொள்ள தெரியாதவன் நீ
அதிலும் பத்துபேரின் கட்டளைக்குப் பயந்து
தவறென்று நினைப்பதை சரியென்று மாற்றிக்கொள்ள
நீ தயாராக இருந்த தில்லை.
தலைவர்களின் நாய்வாலுக்கு கூட
கவிதைகள் எழுதும் பேர ரசுகளின் சாம்ராஜ்யத்தில்
நீ குற்றவாளி ஆக்கப்பட்டாய்.
உன்னை நாடு கட த்திவிடலாம் என்று திட்டமிட்டவர்கள்
தோற்றுப்போனார்கள்.
விருதுகளுக்காக தங்கச்செயினுக்காக உன் பேனா எழுதியதில்லை.
பதவிகளுக்காக உன் குயில் பாடியதில்லை.
நீ – அரசியலில் தோற்கும் போதெல்லாம்
தமிழ்ச்சாதியின் மனசாட்சி
ஜெயித்துக் கொண்டே இருந்த து.
முடிவின் தலைவாசலில் நின்றுகொண்டு
பேசுவதாக சொன்னாய்,
அது முடிவல்ல
இன்னொரு அத்தியாயத்தின் தொடக்கமல்லவா!
“போய்வருகின்றேன்” என்று நீ புறப்பட்டபோது
அவன் இந்த முடிவை விரும்பவில்லை.
இந்த முடிவு அவனை விரும்புகிறது..
என்று த த்துவம் பேசினாய்.
கன்னங்கரிய காகங்களும் குயில்களும்
செக்கச்சிவந்த செம்போத்து பறவைகளும்
உனக்கு நட்பின் நாட்களை நினைவூட்டுவதாக
நீ சொன்னதெல்லாம் வெறும் வார்த்தைகள் அல்ல.
நலம் தானா உடலும் உள்ளமும் நலம்தானா…
(பாடல் பின்னணியில் ஒலிக்கிறது
பாடல் வரிகள்:
நலம் தானா? நலம்தானா?
உடலும் உள்ளமும் நலந்தானா?
நலம்பெற வேண்டும் நீயென்று
நாளும் என் நெஞ்சில் நினைவுண்டு
இலைமறை காய் போல் பொருள் கொண்டு
எவரும் அறியாமல் சொல் இன்று.

கண் பட்டதால் உந்தன் மேனியிலே
புண்பட்டதோ அதை நானறியேன்
என் கண்பட்டதால் உந்தன் மேனியிலே
புண்பட்டதோ அதை நானறியேன்.
புண்பட்ட சேதியை கேட்டவுடன்
இந்த பெண் பட்ட பாட்டை யாரறிவார்?
நடந்ததெல்லாம் மறந்திருப்போம்
நடப்பதையே நினைத்திருப்போம்
கட்டுண்டோம் பொறுத்திருப்போம்
காலம் மாறும் சந்திப்போம்.)

அண்ணா புற்று நோயால் அவதிப்பட்ட காலத்தில்
அவர் கூடாரத்திலிருந்து “போய்வருகின்றேன்” என்று
புறப்பட்டு வெகுதூரம் வந்துவிட்ட குயிலின் குரல்.
இந்த நலந்தானா..
அரசியல் வேலிகளைத் தாண்டிய
விடியலின் வெளிச்சமாய்ப் புறப்பட்ட போது
நலந்தானா என்ற உன் குரலில்
உதயசூரியன் கூட ஒதுங்கித்தான் நின்றது.
போய்வருகின்றேன்.. பக்கங்கள்
குயிலின் குரலா
அரசியல் ஆவணமா இல்லை
சிறகுகள் முளைக்காத குஞ்சுகளுக்கு
நீ எழதி வைத்த அர்த்த சாஸ்திரமா?
வனவாசம் இல்லை என்றால் உனக்கு
அர்த்தமுள்ள இந்துமதம் ஏது?
மானிடரைப் பாடி அவர் மாறியதும் ஏசுவது
என் வாடிக்கையான பதிகம்.
மலையளவு தூக்கி உடல் வலிக்கும் வரை தாக்குவதில்
மனிதரில் நான் தெய்வமிருகம்”
நீயே சொன்னது தான் உன்னைப் பற்றி.
உன் தாக்குதலுக்குத் தப்பிய தலைவர்கள் யாருண்டு?
டில்லிவரை பாய்ந்தவன் நீ.
செங்கோட்டையின் தூண்களைப் பிளந்த
தெய்வமிருகம் – நரசிம்ம அவதாரம்
நாடறிந்தக் கதை. தமிழர் வீடறிந்தக் கதை.
உன் தாக்குதலில் கூட அறமுண்டு.
நீ சாதிப்பார்த்து தாக்காதவன்.
சமயம் பார்த்து தாக்காதவன்.
மாறிவரும் உலகில் நீதி மாறாமல் இருப்பதற்காய்
தாக்குதல் நட த்தியவன்.
சொல்தடி எடுத்து தாக்கியவன்.- அதில்
தப்பியவர்கள் யாருண்டு.
தேடிப் பார்க்கிறேன்..
பெரியாரின் வெண்தாடி பளிச்சிடுகிறது.
கொள்கையிலே முரண்பட்டு தொலைதூரம் வந்தப் பின்னும்
அர்த்தமுள்ள இந்துமதம் அரணாக இருந்தப்போதும்
பெரியாரைத் தாக்காத பேராண்மை உனக்கு உண்டு.

உன்னைச் சித்தன் என்று சொல்லவா
பிழைக்கத் தெரியாத பித்தன் என்று சொல்லவா
பாட்டுப்பாடி பிழைத்த பாணன் என்று சொல்லவா..
நீ ஜார்ஜ் மன்னனின் நிழலில் குடி இருந்தாய்
சார்லசின் குணங்களை அனுபவித்தாய்
ஆனால் நீ மட்டும் பைரனாகவே வாழ்ந்திருக்கிறாய்.
சிறுகூடற்பட்டி மூங்கிலை வெட்டினார்கள் சிலர்.
திட்டினார்கள் பலர். அவமானப்படுத்தினார்கள்
அழவைத்தார்கள். விரட்டினார்கள்.
கூரிய ஆயுதங்களால் சீவினார்கள்.
மூங்கில் தன்னைத்தானே துளைத்து துளைத்து
துடிக்கும் போதெல்லாம் புல்லாங்குழலில்
புருசோத்தமன்கள் பிறந்தார்கள்.
புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே எங்கள்
புருஷோத்தமன் புகழ் பாடுங்களேன்.
சிறுகூடற்பட்டி மூங்கில் வாழ்க
தமிழரின் புல்லாங்குழல் வாழ்க
நம் புருஷோத்தமன் வாழ்க.
நன்றி.. வணக்கம்.