எட்டு திக்கும் தெவிட்டாத பாட்டைக் கொட்டிய
செட்டிநாட்டு கட்டித் தங்கமே!
எட்டுக்கு மேல்
எட்டாதவனே!
எட்டாத உயரத்தைத் தொட்டவனே!
மாட்டு வண்டி புகாத இடத்திற்கெல்லாம் உன்
பாட்டு வண்டி புகுத்தியவனே!
ஏட்டையேத் தொட்டறியாத பாமரனுக்குத்
தட்டிலேந்தி தமிழ்த் தேனை ஊட்டியவனே!
கருவறை தொடங்கி கல்லறை வரை
நீ தொடாத பொருளில்லை!
இனி வருவோருக்குத் தொட பொருளேதுமில்லை!
ஆம் நீ தானே கருவூலம்!
உம் வழியில் தானே மற்றவர் வலம்!
கம்பனையும் காளிதாசனையும் கண்டதில்லை!
பாரதியையும் பாரதிதாசனையும் பார்த்ததில்லை!
கண்ணதாசனை அறிந்த மகிழ்ச்சிக்கோ எல்லையில்லை!
ஐம்பத்து நான்கில் காலன் அழைத்தான் அன்று!
எண்பத்து நான்கு வரை அழைக்காதிருந்தால்
கம்பனையும் வீழ்த்திருப்பாய் இன்று!
சிறுகூடற்பட்டியில் தோகை மறைத்து பிறந்து
சிகாகோவில் தோகை விரித்து பறந்த கவிக்குயிலே!
இருந்து இரங்கற்பா பாடிய இன்முகத்தானே!
நீ இல்லாதிருந்தும் இருக்கிறாய் எங்கள் இதயத்தில்!
வையகம் வாழும் வரை வாழ்ந்திருக்கும் உன் வான் புகழ்!
தழைத்திருக்கும் உன். தேன் தமிழ்!
-முதல் இடம் கி.சாந்தாராம்