அன்புள்ள அங்கத்தினர்களுக்கு வணக்கம்.
நமது தமிழ்ச்சங்கத்தில் . கடந்த நான்கு ஆண்டுகளாக கவியரசர் கண்ணதாசன் அவர்களது பிறந்த நாள் விழாவினை அன்னாரது பாடல்களின் அடிப்படையிலான , மெல்லிசை , பட்டிமன்றம் கவியரங்கம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டாடி வருகிறோம். இந்த ஆண்டின் விழா நிகழ்வுகள் அங்கத்தினர்களின் குடும்பங்களுக்கான, (இசை, கட்டுரை மற்றும் கவிதை ) நிகழ்நிலைப் போட்டிகளாக நடைபெற்றுள்ளன.
இசைப் போட்டிக்கு திருமதி பிரவீணா கௌதம் அவர்களும் திருமதி ஆர். மீனலதா அவர்களும் நடுவர்களாக இருந்து நிகழ்வைச் சிறப்பித்தார்கள்.விழாவிற்கான இசைப்போட்டி இரண்டு சுற்றுகளாக நடைபெற்றது .பங்கேற்பாளர்கள் 5-5-2020 தேதிக்குள் ஒலி நாடாக்கள் மற்றும் காணொளிகளை முதல் சுற்றுக்கு அனுப்பி வைத்தார்கள். நடுவர்கள் இவற்றை மதிப்பீடு செய்து . இறுதிச் சுற்றுக்கு பாடகர்களைத் தேர்வு செய்தார்கள். பாடகர்கள் 18-5-2020 தேதிக்குள் தங்கள் பாடல்களைஅனுப்பி வைத்தார்கள். இவற்றுள் ஐந்து சிறந்த பாடகர்களின் பாடல்களை நடுவர்கள் தரவரிசைப் படுத்தியுள்ளார்கள். கவியரசர் கண்ணதாசன் அவர்களது பிறந்த நாள் விழாவிற்காகக் கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகளும் நடத்தப் பட்டன.பங்கேற்பாளர்கள் தங்கள் படைப்புகளை 7-5-2020ஆம் தேதிக்குள் அனுப்பி வைத்தனர். கட்டுரை மற்றும் கவிதைப் போட்டிகளுக்குத் தமிழ் அறிஞர்களான திரு. எஸ். முத்தையா அவர்களும் திருமதி பானுமதி சங்கரன் அவர்களும் நடுவர்களாக இருந்து தங்களது மேலான ஒத்துழைப்பை நல்கினார்கள். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களது பங்களிப்புகள் கவியரசர் கண்ண்தாசன் அவர்களது பிறந்த தினமான 24-6-1010 அன்று நமது வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்பதை\மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கும் நடுவர் பெருமக்களுக்கும் நவி மும்பை தமிழ்சங்கத்தின் மன்மார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் இவண் பதிவு செய்கிறோம்
இசைப் போட்டி நடுவர்கள்
திருமதி பிரவீணா கௌதமன் அவர்கள் ஒரு தலைசிறந்த கல்வியாளர் மற்றும் இசைக் கலைஞர் ஆவார். இவர் மும்பையின் பிரபல கல்லூரியில் 33 ஆண்டுகள் பணியாற்றி சமீபத்தில் பணி நிறைவு செய்துள்ளார். திருமதி பிரவீணா அவர்கள் இசையில் இரு முதுகலைப் பட்டங்கள் பெற்றவர். இவர், சென்னைப் பல்கலைக் கழகத்திலிருந்து கர்நாடக வாய்ப்பாட்டு இசை மற்றும் வீணை வாசிப்பில் முதுகலை பட்டங்கள் பெற்றுள்ளார். அத்துடன் மும்பை பல்கலைக் கழகத்திலிருந்து வாய்ப் பாட்டு இசையில் பட்டயச் சான்றிதழும் ஷண்முகாந்த சங்கீத வித்யாலயாவிலிருந்து வீணை இசையில் சான்றிதழும் பெற்றுள்ளார். திருமதி பிரவீணா அவர்கள் அமெரிக்கா கானடா போன்ற நாடுகளில் இசை நிகழ்சிகள் வழங்கியுள்ளார். இந்தியாவில் பல சபாக்களில் இவரது இசை அரங்கேறியுள்ளது. இவை நாடு முழுவதும் தொலைகாட்சி ஒளிபரப்பும் செய்யப் பட்டுள்ளன.. ஷண்முகானந்தா சங்கீத வித்யாலயா இவரது வீணை இசைத் திறனைப் பாராட்டி இவருக்கு ‘ஷண்முகமணி’ என்ற பட்டத்தை வழங்கியுள்ளது. இவர் மாணவர்களின் இசைத் திறனை மேம்படுத்த இசைப் பயிலரங்குகளை நடத்தி வருகிறார். அத்துடன் திருமதி பிரவீணா அவர்கள், தற்போது செம்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் மற்றும் நடனப்ரியா நாதம் இசைப் பள்ளிகளில் வாய்ப்பாட்டும் வீணை இசையும் கற்பித்து வருகிறார்.
திருமதி மீனலதா அவர்கள் MTNL நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றிப், பணி நிறைவு செய்துள்ளார்.இவர், பல விருதுகள் பெற்றுள்ள பல்துறைத் திறமையாளர் ஆவார். திருமதி மீனலதா அவர்கள் புல்லாங்குழல் வாசிப்பதிலும் பாடுவதிலும் தேர்ச்சி பெற்றவர். மும்பை பூனே பகுதிகளில் ஆண்டுதோறும் நடைபெறும் இசைப் போட்டிகளுக்கு இவர் நடுவராக இருந்து வருகிறார்.. இவர் ஒரு நாடக ஆசிரியர்.மற்றும் அனுபவம் மிக்க நடிகையும் ஆவார். தமிழ் பத்திரிகைகளில் கட்டுரைகளும் எழுதி வருகிறார். திருமதி மீனலதா அவர்கள் சிறந்த பட்டி மன்றப் பேச்சாளர் ஆவார். அத்துடன் இவர் பிரிட்ஜ் விளையாட்டிலும் கைதேர்ந்தவர் ஆவார்
கட்டுரை மற்றும் கவிதைப் போட்டி நடுவர்கள்
திரு. எஸ்.முத்தையா அவர்கள் மும்பை மாநகராட்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவர், நமது மாநிலத்தின் வருங்கால ஆசிரியர்களுக்கு தொழில் பயிற்சி அளித்து அவர்கள் ஆசிரியப் பணியில் திறன்பெற வழிகாட்டியாக விளங்கி வருகிறார். திரு.எஸ். முத்தையா அவர்கள் 2010ஆம் ஆண்டின் ‘நல்லாசிரியர் விருது பெற்றவர். கவிதை, கட்டுரை, பட்டிமன்றப் பேக்சு இவற்றில் தனிமுத்திரை பதித்து வருகிறார்… மும்பை மாநகராட்சித் தமிழ்ப் பள்ளி ஆசிரியர் குழுமத்தின் செயலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார். சமூக நல ஆர்வலரான இவர் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்குச் சிறப்புப் பயிற்சியளித்து அவர்கள் திறன் வெளிப்பட ஆவன செய்து வருகிறார்.
திருமதி பானு சங்கர் அவர்கள் தமிழில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றவர் ஆவார். தமிழ் வளர்த்த மதுரையில் பல்லாண்டுகள் ஆசிரியப் பணி புரிந்துள்ள இவர், தற்போது, தென்னிந்திய கல்வி குழுமக் கல்லூரிகளில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தமிழ் பயிற்றுவித்து வரும் ஆசிரியை ஆவார். திருமதி பானுமதி அவர்கள், கவிதை கட்டுரை பேச்சுப் போட்டிகளில் பரிசுகள் பெற்றுள்ளா. ஆன்மீகத்துறையில் அதிக நாட்டம் கொண்டுள்ள இவர் இறைவன் மற்றும் ஆச்சார்யர்களைப் போற்றி நற்றமிழ் கவிதைகள் பல இயற்றியுள்ளார். மராத்திய மாநில பால பாரதி பாடப் புத்தகக் குழுவில் இடம்பெற்றுள்ள இவர், பள்ளிக் குழந்தைகளுக்குத் தமிழ் பாடப் புத்த்கங்கள் உருவாக்குவதில் தனது பங்களிப்பை வழங்கி வருகிறார்.