கவிதை உலகின் முடிசூடா மன்னர்
கண்ணதாசன் என்னும் ஒப்பற்ற கவிஞர்
கற்பனைத் தூரிகையில் தமிழைத் தோய்த்து
கருத்தான கவிதைகளைப் புனைந்த புலவர்
நிலவையும் தென்றலையும் குத்தகைக்கு எடுத்து
தன் பாடல் வீதிகளில் உலவச் செய்த வித்தகர்
வாழ்வு தந்த அனுபவங்களைப் பாடங்களாய் ஏற்று
வளமான தமிழில் தத்துவங்களாய் வடித்தார்
துவண்ட மனங்களை நீவி விடுவது அவர் பாடல்
தொலைந்த தூக்கத்தை மீட்டுத் தருவது அவர் பாடல்
தெய்வத்தைக் கண்முன் வரவழைப்பது அவர் பாடல்
தேடல்களுக்கு ஒரு முடிவைத் தருவது அவர் பாடல்
பக்தி பாசம் காதல் சோகம் அரசியல் தத்துவம் யாவும்
நிறைந்தது கவியரசரின் கவிதைப் பெட்டகம்
தித்திக்கும் தமிழில் திகட்டாத காவியங்கள் படைத்து
எத்திக்கும் உள்ள தமிழ் நெஞ்சங்களில் குடிகொண்டவர்
மொழி ஆளுமை ,கற்பனை வளமை ,தமிழ்ப் புலமை
மூன்றும் ஒருங்கே சேர்ந்தது கவியரசரின் தனித்தன்மை
காலத்தால் அழியாத கவிதைகளைத் தந்த
கவியரசர் கண்ணதாசனை என்றும் போற்றுவோம் !!
-இரண்டாம் இடம் திருமதி. ப்ரஸன்னா வெங்கடேஷ்