நவிமும்பை தமிழ்ச் சங்கம் -- தோற்றம்
நவிமும்பை தமிழ்ச் சங்கம் 1976ஆம் ஆண்டு, இந்தியாவின் மராத்திய மாநிலத்தில், நவிமும்பை பகுதியில்
உள்ள வாஷியில், துவங்கப்பட்ட தன்னார்வத் தொண்டு நிறுவனமாகும். மிக எளிய முறையில் முப்பது
அங்கத்தினர்களைக் கொண்ட அமைப்பாகத் தொடங்கப்பட்ட இச்சங்கம் தற்போத ஏறத்தாழ 800
அங்கத்தினர்களைக் கொண்ட பேரமைப்பாக வளர்ந்துள்ளது.
1981ஆம் ஆண்டில் நவிமும்பைத் தமிழ்ச்கங்கம் அரசுப்பதிவுபெற்ற அறக்கட்டளை அமைப்பாக
அங்கீகாரம் பெற்றது. இதனைத் தொடர்ந்து சங்க நிர்வாகிகள் மற்றும் அறங்காவலர்களின் அரு முயற்சியாலும்
அங்கத்தினர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களின் ஒத்துழைப்பாலும், நவிமும்பை தமிழ்ச் சங்கத்தின் கட்டிட
வளாகம் அன்றைய நிதிவசதிக்கு ஏற்ப மிக எளிய முறையில் உருவாக்கப் பட்டது. வெள்ளி விழா ஆண்டான
2002 ஆம் ஆண்டில் ஜனவரி 27ஆம் தேதியன்று திரு.வி ரங்கனாதன், ஐ ஏ. எஸ் அவர்களால் நவிமும்பை
தமிழ்ச் சங்கத்தின் கட்டிட வளாகம் திறந்து வைக்கப்பட்ட.து
நவிமும்பை தமிழ்ச் சங்கம் கடந்த 43 வருடங்களாக மராத்திய மாநிலத்தில் தமிழும் தமிழரும் வாழ்வாங்கு
வாழ ஆவன செய்து வருகிறது. சாதி, மத இனப் பாகுபாடு இன்றி,அரசியல் சார்பற்ற நடுநிலை நோக்கோடு,
தமிழ்ப் பற்றை மட்டுமே தனது அடிப்படை உணர்வாக்கி ஆக்கபூர்வமான பல நற்பணிகளை சங்கம் தொடர்ந்து
ஆற்றி வருகிறது. நவிமும்பைத் தமிழ்ச் சங்கம் தனது தொண்டாற்றலாலும், நிர்வாகத்திறனாலும் மராத்திய
மாநிலத்தின் தலைமைத் தமிழ்சங்கமாகவும் மராத்திய அரசு மற்றும் மாநில மக்களின் நன்மதிப்பையும்,
நல்லுறவையும் பெற்ற அமைப்பாகவும் திகழ்ந்து வருகிறது.
முத்தமிழ் வளர்ச்சி, தமிழ்க் கலாச்சாரம் பேணுதல், தமிழ்க் கல்வி மேம்பாடு, மகளிர் திறன் வளர்த்தல்,
முதியோர் நலம் பேணுதல், சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு செயல்பாடுகளை நவிமும்பை
தமிழ்ச்சங்கம் ஆண்டுமுழுவதும் நடத்தி வருகிறது.
நவிமும்பை தமிழ்ச்சங்கத்தின் சேவைகள் மாநில அளவிலும், அகில இந்திய அளவிலும், உலக அளவிலும்
பாராட்டப் பட்டுள்ளன.2013ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மாலத்தீவு தேசிய பல்கலைக் கழகம் மற்றும் இந்திய
மாலத் தீவு நட்புறவுக் கழகமும் இணைந்து மாலத்தீவில் நடத்திய அகில உலகத் தமிழ் இலக்கிய மாநாட்டில்
நவிமும்பை தமிழ்சங்கத்திற்கு ’இந்தியாவின் தலை சிறந்த தமிழ்ச்சங்கம் ‘ என்ற விருது வழங்கப்பட்டது. அதே
ஆண்டில் செப்டம்பர் மாதம் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகமும், தஞ்சாவூர் தமிழ்த் தாய்
அறக்கட்டளையும் இணைந்து நடத்திய தமிழ் இலக்கிய மாநாட்டில் நவிமும்பை தமிழ்ச்கங்கத்திற்கு
‘இந்தியாவின் தலை சிறந்த தமிழ்ச் சங்கம்’ என விருது வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம்
மராத்திய மாநிலத்தின் பெருமைக்குரிய விருதாகிய ‘கௌரவ சம்மான்’ விருதினையும் நவிமும்பை தமிழ்ச்
சங்கம் பெற்றது .நவிமும்பை தமிழ்சங்க வரலாற்றில் 2013ஆம் ஆண்டு பரிசு மழை பொழிந்த ஆண்டாகும்.
இவை அனைத்திற்கும் சிகரம் வைத்தாற்போல 2014ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பெருமைக்குரிய
‘தமிழ்த்தாய் விருது’ நவிமும்பை தமிழ்ச் சங்கத்திற்கு தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் புரட்சித்
தலைவி மாண்புமிகு அம்மா செல்வி ஜெயலிதா அவர்களது பொற்கரங்களால் வழங்கப் பட்டது .
நவிமும்பை தமிழ்சங்கத்தின் முக்கியச் செயல்பாடுகள்
மராத்திய மண்ணில் தமிழ் மொழியும் தமிழ் கலாச்சாரமும் தழைத்தோங்க நவிமும்பை தமிழ்ச் சங்கம்
பல்வேறு செயல்பாடுகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தற்போது திரு.வி.ஆர்.பி.கிருஷ்ணமூர்த்தி
அவர்கள் தலைமையிலான அறங்காவலர் குழுவினரும், திரு.எஸ்.ஏகாம்பரம் அவர்கள் தலைமையிலான
நிர்வாகக் குழுவினரும் சங்கத்தின் செயல்பாடுகளை நிர்வகித்து வருகிறார்கள். இருகுழுவினரும் சங்கத்தின்
அடிப்படை லட்சியங்களான தமிழ் மொழி வளர்ச்சி, மற்றும் தமிழ் கலாச்சார மேம்பாட்டுக்கான பல்வேறு
செயல்பாடுகளை ஆர்வத்துடன் மேற்கொண்டு வருகிறார்கள். சங்கத்தின் சில முக்கியசெயல்பாடுகள் மற்றும்
சேவைகள் பற்றிய விவரங்கள் இவண் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர் நமது தமிழ் மறையாகிய திருக்குறள் பற்றிய அறிவும் தெளிவும்
பெற உதவும் வகையில் , நவிமும்பை தமிழ்ச்சங்கம் , 2002ஆம் ஆண்டு முதல் ‘திருக்குறள் ஒப்புவித்தல்
போட்டியை’ ஒரு பெருநிகழ்வாக நடத்தி வருகிறது. கிட்டத்தட்ட ஆயிரம் குழந்தைகள் வரை பங்கேற்பு
செய்யும் இந்த நிகழ்வில் பங்கேற்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் விலை உயர்ந்த பங்கேற்பு பரிசும் தகுதியின்
அடிப்படையிலான சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படுகின்றன. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும்
போட்டியில் பங்கேற்க பெருந்திரளாக வரும் மாணவ மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு
அன்றைய தினம் உணவு உபசரிப்பும் செய்யப்படுகிறது. திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நவிமும்பை
தமிழ்ச்கங்கத்தின் ‘திருக்குறள் திருவிழா’ ஆகும். . இந்தப் பெருநிகழ்வுக்காக ஆண்டுதோறும் சுமார் 2 லட்சம்
ரூபாய் நன்கொடை திரட்டப் படுகிறது..
நவிமும்பை தமிழ்ச் சங்கத்தின் இடைவிடா முயற்சியால் 2004 ஆம் ஆண்டு சங்க வளாகம் அமைந்துள்ள
சாலைக்கு ‘திருவள்ளுவர் மார்க்’ எனப் பெயரிடப் பட்டது.
மராத்திய மாநிலத்தின் முதல் தமிழ் மாநாட்டை நவிமும்பை தமிழ்ச்சங்கம் 2005 ஆம் ஆண்டு வெற்றிகரமாக
நடத்தியது. இதன்மூலம் மராத்திய மாநிலத்தின் அனைத்துத் தமிழ் அமைப்புக்களையும் ஒரு குடையின் கீழ்
கொண்டுவந்து தமிழர் ஒற்றுமை ஓங்கும் வாய்ப்பு ஏற்பட்து.
நவிமும்பை தமிழ்ச்கங்கம் முனைவர் திரு. வி.ஜி.சந்தோஷம் அவர்களது உலகத் தமிழ் கழகத்தின் நன்மதிப்பை
பெற்று அந்த அமைப்பின் நன்கொடையாக ஒன்றரை டன் எடை மற்றும் ஏழரை அடி உயரத்தில்
பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்ட திருவள்ளுவர் திரு உருவச்சிலையப் பெற்றது. 2008ஆம் ஆண்டு
வள்ளுவப் பெருந்தகையின் திருவுருச்சிலை சங்க வளாகத்தில் நிறுவப் பட் டது . தமிழ் மறை ஈந்த வள்ளுவப்
பெருமகனார்க்குத் தினந்தோறும் மாலை மரியாதை செய்யப் படுகிறது..
தமிழ்க் கலைகள் வளர உதவும் வகையில் சங்கத்தில் . கடந்த பல ஆண்டுகளாக கர்நாடக இசை, மற்றும்
மிருதங்க வகுப்புக்களையும் நவிமும்பை தமிழ்சங்கத்தில் தொடர்ந்து நடை பெற்று வருகின்றன. இலவசத்
தமிழ் மொழி வகுப்பும் மராத்திய மொழி வகுப்பும் சங்கத்தின் தொடக்க நாள் முதல் தொடர்ந்து நடைபெற்று
வருகின்றன.
மராத்திய மாநிலத்தில் தமிழ்க் கல்வி மேம்பட நவிமும்பை தமிழ்ச்சங்கம் தமிழக அரசுடன் ஒருங்கிணைப்பு
செய்து சுமார் மூன்று லட்சம் ரூபாய் மதிப்புள்ள தமிழப் பாடப் புத்தகங்களை நங்கொடையாகப் பெற்று,
அவற்றை மும்பைக்கு சங்கச் செலவில் போக்குவரத்து செய்து அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கி வருகிறது.
தமிழக அரசின் இணையப் பல்கலைக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற தொடர்பு மையமாகவும் நவிமும்பை
தமிழ்ச் சங்கம் தொண்டாற்றி வருகிறது.
ஆண்டுதோறும் உலகப் புகழ் பெற்ற சிந்தனையாளர்கள் மற்றும் கலைஞர்கள் பங்கேற்கும் கலை இலக்கிய
நிகழ்வுகளை நவிமும்பை தமிழ்ச்சங்கம் சிறப்பாக நடத்தி அவற்றை மக்களுக்கு இலவசமாக வழங்கி
வருகிறது.
தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளைக் கொண்டாட அங்கத்தினர்களுக்கும் அவர்கள் குடும்பத்தினருக்கும்
சங்க நலம் விரும்பிகளுக்கும் அறுசுவை விருந்து ஆண்டுதோறும் மிச் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
2016 ஆம் ஆண்டு முதல் கவிஞர் கண்ணதாசன் அவர்களது பிறந்தநாள் விழா, முன்னாள் குடியரசுத்தலைவர்
முனைவர்.திரு.அப்துல் கலாம் அவர்களது பிறந்தநாள் விழா போன்றவையும் கொண்டாடப்பட்டு வருகின்றன.
சங்க அளவில் நடைபெற்று வந்த பாரதியார் விழாவும் தற்போதுஅனைத்துப் பள்ளிகளும் பங்கு பெறும் பெரு
நிகழ்வாக நடைபெறுகிறது.
கடந்த மூன்றாண்டுகளாக மராத்திய மாநிலத்தில் முதன்முறையாகத் தமிழ் இசைக்காக விழா எடுத்து ‘தமிழ்
இசை ஆராதனை’ விழாவினை நவிமும்பை தமிழ்ச் சங்கம் நடத்தி வருகிறது தொலைகாட்சிப் புகழ்
நிகழ்ச்சியான ‘நீயா நானா’ நிகழ்ச்சியின் பாணியில் சொல்லரங்கம் நடைபெறுகிறது. இவற்றுடன்
நகைச்சுவை அரங்கம் நிகழ்ச்சியும் தற்போது நடைபெறுகின்றன. மகளிர் தின விழாவின் சிறப்பம்சமாக
அங்கத்தினர்களுக்கும் பொதுமக்களுக்கும் விலையுயர்ந்த மருத்துவப் பரிசோதனைகளை நவிமும்பை தமிழ்ச்
சங்கம் இலவசமாக வழங்குகிறது., அன்றைய தினம் ,மகளிர் சமையல் திறன் ஊக்குவிப்பு, மற்றும் கலை
நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
நவிமும்பை சங்கத்தில் முதன் முறையாக இந்த ஆண்டு ‘உலக முதியோர் தினமும்’, ‘மாற்றுத்திறனாளிகள்
தினமும்’ கொண்டாடப் பட்டன. . அறக்கட்டளைகள் மூலம் கல்வி, மற்றும் மக்கள் உடல்நலம் பேணும்
திட்டம் விரைவில் தொடங்க உள்ளது,
சங்க வளாகத்தை விரிவுபடுத்தி மேம்பாடு செய்யும் திட்டத்திற்குப் பொதுக்குழுக் கூட்டத்தில் முறையான
அனுமதி பெறப்பட்டு அதற்கான செயல்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. கட்டிட
விரிவாக்கத்திற்கான குழு நியமிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கட்டிடப் பொறியாளர், மற்றும் கட்டிடக் கலைஞர்
நியமனம் செய்யப்பட்டுள்ளனர். விரிவாக்கத்திற்கான முறையான அனுமதிகளுக்கு சிட்கோ மற்றும்
நவிமும்பை மாநகராட்சியில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டு அவை விரைவில் வழங்கப்பட உள்ளன.
சங்க விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் ஆக்கபூர்வமான
பல திருத்தங்களை அங்கத்தினர்களுக்கு விரைவில் சமர்ப்பிக்க உள்ளார்கள்
சங்கத்தின் வலைத்தள உருவாக்கமும் நடைபெற்றுள்ளது. சங்கத்தின் வரலாறு, முன்னாள் அறங்காவலர்
குழுக்கள், நிர்வாகக்குழுக்கள் பற்றிய விவரங்களை முறையாகத் தொகுக்கும் முயற்சி மேற்கொள்ளப்
பட்டுள்ளது..
இத்துடன் அனைத்திந்திய தமிழ் அமைப்புக்களின் பேரவையின் செயல்பாட்டிலும் நமது நவிமும்பை
தமிழ்சங்கம் தனது பங்களிப்பை வழங்கி வருகிறது